தம்பிரான்தோழர் கபிலனார்

 

தம்பிரான்தோழர் கபிலனார் வரலாறு

 

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

உலகை உய்விக்கும் பொருட்டு இறைவன் அவ்வப்போது பல புண்ணிய ஆன்மாக்களை இங்கு அனுப்பி வைப்பது வழக்கம். யோகியர், ஞானியர், இறைதூதர் எனப் பலவாறும் அழைக்கப்படுவோர் இந்த வகையினரே. அவ்வாறு வருவோர் நித்தியம் பற்றியும் அநித்தியம் பற்றியும் பலவாறு விளக்கிச் சொல்லியும் வாழ்ந்து காட்டியும் செல்வர். 

இவ்வுலகத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கேற்ப நெறிகள், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் முதலானவை மாறுபட்டபோதிலும் அடிப்படை உணர்வில் படைப்புகள் யாவும் ஒன்றேபோல்தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த உணர்வுகளுக்கு எல்லாம் அடிப்படை சிவபெருமானின் எண்குணமேயாகும். அவையாவன                   

    1.   முற்றறிவு,

    2.   இயற்கையறிவு,

    3.   வரம்பிலாற்றல்,           

    4.   வரம்பிலின்பம், 

    5.  தன்வயமுடைமை,                               

    6.  இயல்பாகவே கட்டின்மை,

    7.   தூயவுடம்புடைமை,

    8.   பேரருளுடைமை.

 

இந்த எண்குணம் சிவபெருமானின் படைப்புகளில் எண்ணில் பல்குணமாக பக்தி, தயை, வீரம் எனப் பலவாறாக வெளிப்படுகின்றன.

இவ்வாறு வெளிப்பட்ட பல குணங்களாலும் தாயினும்  சாலப் பரிந்து நம்மைக் காத்தருளும் சிவபெருமானைக் கொண்டாடிய நிலை மாறி சக மனிதர்களுடன் கொண்டாடுவதும் போட்டி, பொறாமை எனப் பழிவாங்குவதுமாக மாறிற்று.  இதனால் சமுதாயத்தில் சிவானந்தப் பேருணர்வு படிப்படியாகக் குறைந்து மறைந்தே போகும் நிலையில் உள்ளது.     இந்நிலையில் இருந்து மீள்வதற்கு இன்று மனித குலம் மறுவாழ்வு ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறது.

ஏன் என்ற கேள்வியை எழுப்பி அதற்குத் தத்துவங்களால் விடைகாணும் நிலை ஆரம்பித்தபோதே மனிதன் உணர்வு என்னும் முதல் நிலையில் இருந்து அறிவு என்னும் இரண்டாம் நிலைக்குத் தாழ்ந்துபோகிறான்.

இந்தத் தத்துவங்களால் எதையும் அறியும் போக்கில், தான் தனது என்ற சுயநலம் வலுக்கப் பெறவே தத்துவங்கள் மெய்ம்மை நிலையில் இருந்து மனிதனை மனிதன் ஆளவும், அடிமைப்படுத்தவும் வேண்டிய வடிவங்களாக மாற்றம் பெற்றன.

இவ்வாறு இருந்த மனிதன் இன்று தன்னையும், தான் வாழும் உலகையும் அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளான். இத்தகைய அனர்த்தமான நிலை உண்டாகும்போதெல்லாம் மெய்யுணர்வை மேல் எழச் செய்ய ஒருவர் மூலம் உலகை காப்பது ஈஸ்வரனின் வழக்கம்.

அவ்வாறு காக்க வந்தவர்களைத் தேவர்கள் எனவும்,  சித்தபுருஷர்கள் எனவும், குலதெய்வங்கள் எனவும், சிறுதெய்வங்கள் எனவும் பலவாறு கடவுளராகவே மனிதர்கள் கருதினர், வணங்கினர்.  அவர்கள் சொன்ன வழியே இன்றும் பொருந்தும் நிலையான வழி என நம்பினர். மயங்கினர்.  இதனால் காப்பாற்ற வந்தவர்கள் கடவுளானார்.  கடவுள் காணாமல் போனார்.

இந்த மாயத் தெய்வங்கள் வசம் சிக்கி நாம் வழியறியாமல் திணறிக்கொண்டிருப்பதையே "ஆறுகோடி மாயாசக்திகள் வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின" என மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளார்.

இறைவனை மறந்தவன் இறந்தவனுக்குச் சமம். இந்த உண்மையை "சாகும் வாழ்வை பேணும் மனிதன் சாகாப் பிணமன்றோ" எனக்கூறி இருண்ட இதயங்களில் எல்லாம் ஒளியேற்ற வல்ல சிவனருளை வெளிப்படுத்தியவாறு வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் அற்புதமே தம்பிரான்தோழர் கபிலனார்.

அவரைப் பற்றி மனித குலத்திற்கு அறியத் தருவது மிக மிக அவசியம்.  இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என் பெரும் பாக்கியம். எம்பெருமான் எனக்களித்த ஆசீர்வாதமே. இவர் ஈழ மணித்திருநாட்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மிகப் பழமையான வைத்திய பரம்பரையில் வந்த சிவஞானசுந்தரம், அற்புதமலர் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். 'நல்லநாயகி" பாட்டியால் வளர்க்கப்பட்டார். சிறு வயதில் பாட்டிதான் இவருடைய உலகம். பாட்டியோடுதான் பெரும் பொழுதைக் கழித்தார். முதல் உறவே இறையுறவாக அமையப்பெற்றார். ஆம். இவருடைய பாட்டி யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளால் தீக்கை வழங்கப்பெற்றவர்.

நல்லநாயகி பாட்டி இளம் வயதில் கணவரை இழந்தவர்.  கணவரை மறக்க முடியாத துன்பத்தில் வீட்டு முற்றத்தில் அமர்ந்து அதிகாலையில் அழுது கொண்டிருக்கும்போது யோகர் சுவாமிகள் இருக்கும் இடம்தேடி வந்தார்.  'உன்னாணை அழாதே. என்னாலே அங்கே தூங்க முடியவில்லை' எனக்கூறி ஓங்கித் தன் கையால் தலையிலே ஒரு தட்டு தட்டினார்.  இறந்த கணவர் பொன்னையாவிற்கு படைக்கப்பட்டிருந்த தண்ணீரை பருகிவிட்டு அங்கிருந்து யோகர் சென்றுவிட்டார். அதுவே பாட்டிக்கு தீட்சை ஆனது.  காலப்போக்கில் காலையும் மாலையும் கையில் பால் செம்புடன் நல்லூர் கோயிலுக்கு சென்று தொண்டு செய்வதே அவருக்கு வாழ்க்கையாயிற்று.  இறை தொண்டில் தன்னை அர்ப்பணித்த ஒருவர்கையில் பேரப்பிள்ளையாக ஐயா வாய்த்தார்.  இந்த இறையுணர்வு சிறுவயதிலேயே ஐயாவிற்கு இறைவனிடத்தில் நாட்டம் ஏற்படக் காரணமாயிற்று.

பல மணி நேரமாக சாமி அறையில் உட்கார்ந்து அங்குள்ள தெய்வ வடிவங்களைப் பார்ப்பது அங்கேயே அமர்ந்து விளையாடுவது ஐயாவின் வழக்கம். சிறுவயதிலேயே சுதையில் வடித்த நடராஜர் திருமேனி ஒன்றைக் கடையில் பார்த்ததும் வாங்கித் தருமாறு தந்தையிடம் கேட்டார்.  அவரும் அவ்வாறே வாங்கிக் கொடுத்தார்.

"பூ வைப்பது, ஊதுபத்தி ஏற்றுவது, தீபம் காட்டுவது இவற்றால் பயனில்லை. சுவாமியை கும்பிட்டால் சிரத்தையோடு உட்கார்ந்து கண்களை மூடி தியானிக்கும் பழக்கம் வேண்டும்" என இவருடைய தந்தையார் அறிவுரை கூறினார். அவர் சிறு வயதில் தீவிர ஆத்திகராக இருந்து கொல்கத்தாவில் பட்டப்படிப்பு படித்தபின் கம்யூனிஸ்டு கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இறை நம்பிக்கையை கைவிட்டிருந்தவர் என்பது இங்கு கருதப்பட வேண்டிய ஒன்றாகும். தந்தையின் அறிவுரைப்படி ஐயாவும் பல மணி நேரம் மனைப்பலகையில் உட்கார்ந்து இறைவனைப் பல மணி நேரம் தேடுவதில் தொடர்ந்து ஈடுபட்டார்.

ஒரு சமயம் சாமி அறையில் உள்ள உருவங்கள் அசையக் கண்டிருக்கிறார். இன்னொரு சமயம் சிறு தேர் உருட்டி விளையாடும் பொழுது அந்த தேரில் சுவாமியை வைத்து விளையாடுகையில் அங்கிருந்து ஒளிப் பிழம்பு தோன்றுவதையும் கண்டிருக்கிறார். இவருடைய சிந்தனையோட்டம் பள்ளிக்கல்வி, உயர்கல்வி என மாறுபட்டு வந்தபோதும் குழந்தை விளையாட்டு முதல் இறையுணர்வு இடைவிடாமல் மேலோங்கி இருந்ததை இவரோடு பழகியவர் அறிவர்.  இவர் இன்றும் சிவபுரத்தில் குழந்தைகளோடு கூடி சிறு தேர் செய்து அதில் சுவாமியை வைத்து ஊர்வலம் நிகழ்த்தி மலர் தூவி விளையாடுவதை நாம் பார்க்கலாம்.

சிறுவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை ஐயா விரும்ப மாட்டார். குழந்தைகள் தாமே கற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு சிவபெருமான் இயற்கை அறிவை வழங்கியிருக்கிறார். அந்த இயற்கையறிவான தானே கற்றுக்கொள்ளும் திறனை மேம்படுத்த வேண்டுமேயன்றி நாமாக வலிந்து எதையும் கற்றுக்கொடுக்கக் கூடாது என்பார். ஒரு சாக்லேட்டை பிரிப்பதானாலும் அதைத் தானே பிரிக்கட்டும் எனக் குழந்தையிடம் விட்டுவிடு அல்லது நீ பிரித்து எடு அதைப் பார்த்து குழந்தை தானே கற்றுக்கொள்ளட்டும் என்பார். இங்கே பார் இப்படிப் பிரி என ஒருபோதும் விளக்கம் சொல்லி கற்றுக் கொடுக்கக்கூடாது என்பார். 'கண் பார்க்க கை செய்ய வேண்டும்' என்பார். அத்தகைய கற்கும் திறன் மிக்க இயற்கையறிவோடு இறைவன் மனிதர்களைப் படைத்திருக்கிறார் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம் என்பார். 'கற்ற கல்வி பட்ட மரத்திற்கு சமம்' என்பார்.  பட்ட மரம் ஒரு போதும் துளிர்க்காது. பள்ளி, கல்லூரி படிப்புகளால் மேன்மை உண்டாவது இல்லை. யாருடைய நெஞ்சில் ஆசிரியர் நடத்தும் பாடம் விதையாக விழுந்து இயற்கையறிவு என்னும் திறனால் முளைவிட்டுத் துளிர்க்கிறதோ அவனே மெய்யாகக் கற்கிறான் என்பார்.

ஐயாவின் குழந்தைப்பருவம் நல்லநாயகி பாட்டியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாட்டி சொல்லும் பாடல்களைத் தானே கேட்டு மனப்பாடம் செய்து பாடுவார். இதை அவருடைய தந்தை தன்னுடைய நண்பர்களிடம் பாடிக் காட்டச் சொல்லி ஊக்கப்படுத்துவார். ஆரம்பப் பள்ளியில் சேர்ந்ததும் ஐயாவிற்கு பள்ளிப் படிப்பு பிடிபடவில்லை. வகுப்பில் மிகவும் மோசமான கடைநிலை மாணாக்கனாகவே பெரிதும் விளங்கினார். இயற்கையறிவில் கருத்தூன்றிய அவருக்கு கற்றுக் கொடுக்கும் பாடத்தை மனதில் ஏற்றுவதும் சுமப்பதும் மீண்டும் பரீட்சையில் வெளிப்படுத்துவதும் சுமையாகவே இருந்தது என்பார்.  ஆனால் வானொலியில் வரும் திருவெம்பாவைப் பாடல்கள் மற்றும் சினிமாப் பாடல்கள் போன்றவற்றைக் காதில் கேட்டே மனதில் பதித்துக்கொண்டு தானே பாடும் திறன் மிக்கவராக இருந்தார்.

ஐந்தாம் வகுப்பில் செயின்ட் ஜான் பொஸ்கோ எனும் பள்ளிக்கு மாற்றப்பட்டபோது அங்கிருந்த 'மதர்' ஒருவர் ஐயாவின்மேல் தனிப்பட்ட அன்பைக் காட்டி பள்ளி நேரம் முடிந்த பின் அவருக்கு கணிதம், ஆங்கிலம் முதலான பாடங்களைப் புரிந்துகொள்ளுமாறு கற்றுக்கொடுத்து பள்ளிக் கல்வியில் முதன்மைப்படுத்தினார். கிறித்தவ சகோதரி ஒருவர் ஐயாவின் மேல் காட்டிய தனிப்பட்ட அன்புக்கும் காரணம் இல்லாமல் இல்லை. இது இந்தக் குழந்தையின் பிறப்பிலே வந்த இரகசியம். சிந்தியுங்கள்; இந்த மண்ணில் ஒவ்வொரு மனிதனும் ஒரு பிறவித் தொடரில் தொடர்ந்து பிறந்தும் இறந்தும் கொண்டிருக்கிறான். புதுமையாக எதுவும் திடீரெனத் தோன்றுவதில்லை. நடைமுறைக் காலமும் கலாச்சாரமும் மட்டுமே மாறி மாறி இருக்கும் அந்தத் தொடரில் ஏற்பட்ட ஒரு பந்தத்தின் தொடர்ச்சியே மதம் மாறிய இருவருக்கிடையே மன ஈர்ப்பையும் ஒற்றுமையையும் உண்டாக்கியது.

இந்தச் சகோதரி கொடுத்த கல்விப் பயிற்சியால் 6-ஆம் வகுப்பில் பிரபலமான யாழ்ப்பாணம் செயின்ட் ஜோன்ஸ் கல்லூரியில் ஐயா அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து பள்ளிக்கல்வியில் உயர்ந்து பத்தாவது பொதுத் தேர்வில் பள்ளியிலே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

 

மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற பெற்றோர் விருப்பத்திற்கு ஏற்ப மேற்படிப்பை தொடர்ந்தார். அப்போதெல்லாம் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கேட்பதை விட தானே புத்தகத்தைப் படித்து அறிவதே தனக்குப் பிடித்த கல்வி முறையாக இருந்தது என்பார். 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மருத்துவப் படிப்பில் சேரும் அளவிற்கு அவர் மதிப்பெண் பெறவில்லை. தனியாக லண்டன் அக்கவுண்டன்சி படிப்பு படித்தார். அதிலும் முதல் பாகம் தேர்ச்சி பெற்றார்.  தொடர்ந்து அவருக்குச் சமுதாயத்தின்பால் நாட்டம் சென்றதால் அவருடைய தந்தை ஈழத்தில் தோன்றி வளர்ந்த போராட்டச் சூழலைக் கருத்தில் கொண்டு ஐயாவை இந்தியாவிற்குச் சென்று பட்டப்படிப்பு படிக்குமாறு அனுப்பி வைத்தார். இந்தியாவிற்குப் புறப்படும்போது ஐயா தன்னுடைய தந்தையாரிடம் நான் தமிழ் படிக்க விரும்புகிறேன் எனக் கூறினார். இது கேட்ட தந்தை அதிர்ச்சி அடைகிறார். இவருடைய தந்தையார் ஒரு கல்வி அதிகாரி. தமிழ் படித்து என்ன செய்வாய் எனக் கேட்கிறார். அதுதான் எனக்கு பிடித்திருக்கிறது எனக் கூறி இந்தியா வந்திறங்குகிறார்.

அப்போது ஐயாவின் மூத்த சகோதரர் திருச்சி பிராந்திய பொறியியல் கல்லூரியிலும், இரண்டாவது அண்ணன் சென்னை லயோலா கல்லூரியிலும் பயின்று கொண்டிருக்கின்றனர். விமானம் மூலம் திருச்சியில் வந்திறங்கி மூத்த சகோதரர் படிக்கும் கல்லூரிக்குச் செல்வதற்காக சத்திரம் பஸ் நிலையத்தில் நின்றபோது எம்பெருமான் அவரை ஆட்கொள்ளும் அற்புதத்தைத் தொடங்கினார்.

ஐயாவின் மனதிற்குள் ஓர் இனம் புரியாத ஈர்ப்பும் இன்பமும் தோன்றிற்று. கால்கள் தாமே காலணிகளைக் கழற்றின. தானே தன்னை அறியாமல் தன் கால்களை மண்ணிலே தேய்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார். அப்போது வாயும் எதையோ முணுமுணுப்பதைக் கண்டு கவனிக்கத் தலைப்பட்டார். 'அப்பாடா  எப்படியோ என் தாய்நாட்டிற்கு வந்துவிட்டேன்' என தனக்குத்தானே கூறிக்கொண்டதை இன்றளவும் ஆச்சரியம் என்றே குறிப்பிடுவார்.

ஐயாவிற்கும் தமிழ்நாட்டு மண்ணிற்கும் இடையே உள்ள பந்தம் ஒரு ஜென்மாந்திர தொடர்ச்சி, 'அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த' என மாணிக்கவாசகர் கூறிய நோக்கை நிறைவேற்ற ஜென்ம ஜென்மமாகப் போராடியவருக்கு சிவபெருமானின் தென்னாட்டு பந்தம் புலப்பட்டதும் பரவசப்படுத்தியும் வியப்பில்லை. எல்லா உயிர்கட்கும் தன்னை உணர்த்த விரும்பும் சிவபெருமான் புறத்தார்க்குச் சேயோனாக வேண்டியதை கொடுத்து தூரத்தில் இருப்பினும், தன்னவனுக்கு அவன் தாயினும் சாலப் பரிந்து அருள்பவன் அல்லவா.  அதனால்தான் அவன் தென்னகத்தில் கால் வைத்ததும் தன்னுடைய குழந்தையைப் பரவசப்படுத்தியிருக்கிறான்.

நெற்றி நிறைய நீறு பூசி கையில் விண்ணப்பத்துடன் லயோலா கல்லூரி முதல்வர் அருட்தந்தை காஷ்மீர் ராஜ் அடிகளார் முன் சென்றபோது மருத்துவத் துறையில் பயின்ற நீ நல்ல மதிப்பெண் பெற்றும் ஏன் தமிழ் படிக்க விரும்புகிறாய் அறிவியல் துறையில் ஏதாவதொன்றைத் தேர்வு செய் நான் அனுமதி தருகிறேன் என்றார். "இல்லை, தந்தையே நான் தமிழ்தான் படிக்க வேண்டும்" என ஐயா கூறினார். அருட்தந்தை புன்னகையோடு வாழ்த்தி அனுமதியளித்தார். தீர்க்கமான முடிவும் அந்த முடிவில் நிலைக்கும் மன உறுதியும் இறைவன் திருவடியைப் பற்றிக்கொள்ளும் அளவிற்கு அவரை மேன்மைப்படுத்தின. இந்த முடிவிற்குத் தன்னை இட்டுச்செல்லக் காரணமாக இருந்தது பள்ளிப் பருவத்தில் ஆங்கிலம், வடமொழி, தமிழ் ஆகியவற்றைத் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொடுத்த கல்வி இயக்குனர் திருமதி இரத்தினா நவரத்தினம்  அவர்கள் கூறிய  “We don’t need Doctors and Engineers, we need Leaders to lead our Society” என்னும் மொழிகளே காரணமாயிற்று என ஐயா கூறுவார்.

ஆற்றல், தொடர்ச்சி, அஞ்சாமை ஆகியன ஐயாவிற்கு இயற்கையாகவே அமைந்த பண்புகளாகும். எந்தவொரு சூழலிலும் அவர் பதறமாட்டார். பயப்படவும் மாட்டார். யாராலும் தீர்க்க முடியாத சிக்கலாக இருந்தாலும் தன்னால் தீர்க்க முடியும் என நம்புவார். பலமுறை தோல்வியடைந்தாலும் விடாமல் தொடர்ந்து முயல்வார். முடியாது என்ற முடிவிற்கு ஒருபோதும் வரமாட்டார்.

கல்லூரி வாழ்க்கை ஐயாவிற்குப் பாடத்தை மட்டுமல்ல குடும்ப வாழ்க்கையையும், கலை, பண்பாடு எனப் பல்வேறு துறைகளையும் கற்றுக்கொடுத்தது. நாடு, இனம், மொழி, சாதி, மதம் எனப் பலவகையிலும் மனிதர்களை பேதப்படுத்துவதும் ஒடுக்குவதும் அவருடைய அறிவிற்கு எட்டியதோடு அனுபவத்திற்கும் எட்டியது. புறக்கணிப்பிற்கும் ஒடுக்குதலுக்கும் மத்தியில் தனக்கு மதிப்பும் அன்பும் காட்டுவோர் இருந்தனர் என்பதை ஐயா மறக்கவில்லை. ஐயாவிற்குப் பொதுவாக தன்னை விட வயதிலும், தகுதியிலும் மூத்தவர்களோடு அதிக நட்பு உண்டாயிற்று. லயோலா நண்பர் பலரும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்த பலரையும் ஐயாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். அதில் சிலர் ஐயாவின் அறிவையும் திறமையையும் கண்டு அவரை விலக்கி நடந்ததை அவர் பலமுறை சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்டுள்ளார். 

இவையெல்லாம் எந்த நிலையிலும் இன்னொரு மனிதனைப் புண்படுத்தக்கூடாது என்பதைத் தனக்குக் கற்றுக்கொடுத்தது எனக் கூறுவார். இவர் ஏற்றத்தாழ்வின்றி எந்த நிலையிலும் எப்படிப்பட்டவர்களையும் நேசிப்பார். ஒருவரைக் குறை கூறிப் பார்க்கவே முடியாது. நமக்கு ஒருவனிடம் பலகுறைகள் தென்படும். ஆனால் ஐயாவிற்கு அவனிடம் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு நல்ல குணமே தென்படும். நீரில் கலந்த பாலைப் பிரித்துண்ணும் அன்னப் பறவைபோல் எவ்வளவு மோசமான மனிதனுக்குள்ளும் உள்ள நல்லதைக் கண்டறிந்து அவனோடு அன்பு பாராட்டுவார். ஆனால் ஐயாவின் இந்த மேன்மையை அறியாத பலர் தாங்கள் உயர்ந்தவர் எனக் கருதியே ஐயா தம்மை நேசிக்கிறார் என மூடத்தனமாக நினைப்பதைக்  கண்கூடாகப் பார்த்தும் கொதிப்படைந்தும் இருக்கிறேன். ஐயாவிடம் இதைப்பற்றிச் சொன்னால் இருந்துவிட்டுப் போகட்டும் அவன் சந்தோஷமாக இருந்தால் போதும். அவன் பொய்யன் என நீருபித்து அவனைத் துயரப்படுத்தி என்ன சாதிக்க முடியும் விடு அவன் நிம்மதியாக இருந்துவிட்டுப் போகட்டும் என்பார்.

பட்ட மேற்படிப்பைத் தொடரச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பி.எச்.டி. ஆய்வை முடிக்கும் தறுவாயில் ஐயாவின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் உண்டாகிறது. பல்கலைக்கழகத்தில் பழக்கமான ஒருவர் தன்னைக் கடவுள் என்றும் அவதாரம் என்றும் கூறிக்கொண்டிருக்கும் ஒரு சாமியாரை அறிமுகப்படுத்தி வைக்கிறார். அவரிடம் மெய்யாகவே சில ஆன்ம சக்திகள் இருப்பதைக் கண்டதும் ஐயாவிற்கு இறை நம்பிக்கையில் உறுதி அதிகமாயிற்று.

இந்த வேளையில் ஐயாவின் இளைய சகோதரி மற்றும் சகோதரர்கள் இருவருடன் தாய் தந்தையரும் சென்னையில் வந்து தங்கினர். திருமணமாகி வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டிருந்த மூத்த சகோதரர்களிடம் இருந்த எந்த உதவியும் கிடைக்கவில்லை.  தந்தையார் ஓய்வு பெற்று வந்தமையால் குடும்பச்சுமை எதிர்பாராமல் ஐயா மேல் விழுந்தது.  இந்த இடைவெளியில் அவர் தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.  தம்பியரின் மேல் படிப்பு தங்கையின் திருமணம் எனப் பலவும் அழுத்தியபோது பல நண்பர்கள் ஐயாவிற்கு உதவினர். அதையும் தாண்டி மனைவியின் சகோதரியரிடம் கடன்பட்டார். கடனை அடைக்க முடியாமல் திண்டாடினார். 

தன்னைக் கடவுள் எனக் கூறிக்கொண்ட சாமியாரின் போக்கில் முரண்பாடுகளும் ஏமாற்றுத் திட்டங்களும் வெளிப்படவே அவருக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஐயா துணிச்சலுடன் எதிர்க்கிறார். இதனால் பல ஆசிரமவாசிகள் ஐயாவைத் தூற்றினர், மிரட்டினர்.

இந்த வேளையில் ஐயா நோய்வாய்ப்படுகிறார்.  கடுமையான காய்ச்சலில் இருக்கும்போது ஐயாவினுடைய நண்பர் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் ஆசிரமத்திற்கு நெருக்கமான ஒருவர் வருகிறார். அந்தச் சாமியாரின் கொள்கைகளை விமர்சிப்பதால்தான் உனக்கு நோய் வந்துள்ளது. இதற்கு முன்னரும் உன் வாழ்நாளில் உன்னைக் கொல்ல அவர் இரண்டு முறை முயன்றுள்ளதாக தன்னுடைய ஆன்மிக அனுபவத்தில் அறிந்து கொண்டேன் என நம்பத்தகுந்தவாறு எடுத்துக் காட்டி மிரட்டுகிறார். திடீர் எனக் கண்களை மூடியவாறு ஐயாவின் மனைவியைப் பார்த்து 'நீ சிவன் கோயில் போகிறாயா' எனக் கேட்கிறார். 'ஆம் நான் பிரதோஷ விரதம் இருந்து சிவன் கோயில் செல்கிறேன்" என மனைவி சொன்னதும் 'நீ சிவன் கோயிலுக்கெல்லாம் போகக்கூடாது மீறிப்போனால் ஐயாவின் உயிருக்கு ஆபத்து" என மிரட்டுகிறார். அடுத்த நாள் ஐயாவின் உடல்நிலை இன்னும் மோசமடைகிறது. கோடம்பாக்கம் பெஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எல்லா சோதனைகளும் முடிந்த பின்னும் நோயைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வாந்தியும் பேதியும் குறைந்தபோதும் களைப்பு நீங்கவில்லை.

இந்த வேளையில் ஐயாவின் பிரச்சாரத்தைக் கேட்டு தன்னைக் கடவுள் எனக் கூறிக் கொண்டிருந்த அந்தச் சாமியாரின் பல பக்தர்கள் அவரிடம் செல்வதைக் கைவிட்டனர்.  சிவபெருமானே முழுமுதற்கடவுள் என நம்பத் தொடங்கினர்.

ஆசிரமத்தோடு தொடர்புடைய ஒருவர் 111 என இலக்கமிட்ட சக்கர நாற்காலியில் ஒருவர் வருவார் அவர் சொல்வதைக் கேட்டு நடக்கச்சொல்லுங்கள் என மருத்துவமனைக்குச் சொல்லி அனுப்பியிருந்தார். அதேபோல் ஐயாவுடன் கல்வி பயின்ற நண்பர் ஒருவரின் தந்தை ஐயாவைப் பார்க்க வந்தார். அவர் எப்போதும் சக்கர நாற்காலியில் நடமாடும் ஒருவர். சிறுவயதிலேயே  இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர். இந்த வயதில் தீவிரமாகக் கடவுளைத் தேடாமல் விவேகானந்தர் வழியைப் பின்பற்றினால் நல்லது என வலியுறுத்தினார். ஐயாவும் தலையசைத்தவாறு அரை மயக்கத்தில் கேட்டுக்கொண்டிருந்தார். வந்தவரின் துணைவியார் சக்கர நாற்காலியைத் திருப்பியபோது பார்த்தால் 111 என்ற இலக்கம் அதில் பொறிக்கப்பட்டிருந்தது.  அங்கு ஐயாவைச் சூழ்ந்திருந்த பலரையும் இது அச்சத்தில் ஆழ்த்தியது. அப்போது ஐயா தன் மனைவியிடம் 'எனக்கு எல்லாம் புரிகிறது. என்னை நானே சரி செய்கிறேன்' எனக் கூறினார். மூன்று நாட்களுக்குப் பின் வீட்டிற்கு வந்த பின்னும் உடல்நிலை சரியாகாமல் இருக்கவே தாயார் சொன்னபடி மஞ்சள்காமாலைக்கான சோதனை செய்தபோது அதுவே நோய் எனக் கண்டறியப்பட்டு யுனானி மருத்துவ முறையில் குணப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து பணத்திலும், உறவிலும் சிக்கல்கள் அதிகமாயின. ஐயாவின் நாட்டம் சிவபெருமான் மேல் சென்றது.  தன்னைக் கடவுள் எனக் கூறிக்கொள்ளும் சாமியாரின் ஆசிரமத்தில் பலரும் அவரையே கண்மூடிக் காட்சியாகக் கண்டபோது ஐயாவிற்கு மட்டும் ஆடும் கூத்தப்பெருமானே காட்சி கொடுத்தார். இதனால் இதற்கு மேல் அறிவுக்கு எட்டி வேறு வழியில்லை என்ற நிலையில் "நான் வாழ்வதற்கு இந்த உலகம் தகுதியானதாக இல்லையா அல்லது இந்த உலகில் வாழும் தகுதி உடையவனாக நான் இல்லையா" இந்தக் கேள்விக்கு பதில் சொல் அல்லது நான் இந்தக் கடலிலே விழுந்து உயிரை விடுகிறேன் என்ற உறுதியுடன் யாருக்கும் சொல்லாமல் திருச்செந்தூர் சென்றார்.

அங்கே பேருந்திலிருந்து இறங்கியதும் யாரோ ஒருவர் 'பஞ்சலிங்க தரிசனம் செய்யலாம் வா' எனக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றதாகக் கூறினார். அப்போதுதான் முருகன் கோயிலில் சிவன் இருப்பது அவருக்கு தெரிய வந்தது. பின் கடலிலே இறங்க முயன்றபோது அசரீரியாக சிவபெருமான் பேசக் கேட்டார்.

"இந்த உலகம்தான் சரியாக இல்லை. நான் இந்த உலகை 50 வருடங்களுக்கு மேலாக நேரடியாகப் பரிபாலனம் செய்யவில்லை. மீண்டும் நேரடியாகப் பரிபாலனம் செய்வேன். பழைய சிவாலயங்கள் புதுப்பிக்கப்படும். பிரதோஷம் தோறும் மக்கள் பெருமளவில் என்னை நாடி வருவர். இந்தச் செய்தியைப் போய்ச் சொல்" என 1999 மார்ச் 11ஆம் தேதி சொல்லியனுப்பினார்.  அதன்படி அன்று முதல் "சிவபெருமான் ஒருவரே முழுமுதற் கடவுள். படைத்தவனை மட்டுமே வணங்கு. படைப்புகளை வணங்காதே. இன்புற வாழ்வாரே இறைவனடி சேர்வார் அறம் எனச் சொல்லி உன்னையும் பிறரையும் சித்திரவதைக்கு உள்ளாக்காதே. ஆனந்தம் இருக்குமிடத்திலேதான் சிவம் வெளிப்படும். சிவசொரூபம் ஆனந்த சொரூபம். சிவதாண்டவம் ஆனந்தத் தாண்டவம்" என முதலில் சிவநெறிச் சங்கம் என்ற அடியார் அமைப்பின் மூலமும் பின் சிவபுரம் வாயிலாகவும் ஐயா எடுத்துரைத்து வருகிறார்.