அறிவியலும் அறிவுக்குறைவும்

 

அறிவில் குறையுடையவரே முக்தி இன்பம் என்றொரு இன்பம் இல்லை என்பர். இந்த உண்மையை உணர்வதற்கு அறிவியல் மாயையிலிருந்து நாம் விடுபடவேண்டும். இதற்காக அறிவியல் கோட்பாடுகளும் காலமும் பற்றிப் பொதுவாகக் கொஞ்சம் அறிந்து கொள்வோம்.

 

அறிவியலும் காலமும் பற்றி இங்கு வழங்கப்படும் விளக்கத்திற்கு அடிப்படையான ஆய்வினை பல வருடங்களாக முன்னெடுத்துவரும் பெருமதிப்பிற்குரிய அருட் செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்களுக்கு நன்றியாக என்னுடைய இதயத்தில் ஓர் இடமளிக்கிறேன் இன்று அவரோடு இணைந்து அந்த ஆய்வின் விளைவான 'நமசிவாய வானியல் (நவா) கோட்பாட்டை வடிவமைப்பதால் எனக்கு ஏற்பட்ட இறை தத்துவம் பற்றிய தெளிவையே இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்த நமசிவாய வானியல் தத்துவங்களைத் தொடர் கட்டுரையாக வெளியிட்ட 'ஓம் சக்தி' மாத இதழுக்கும் அதன் பொறுப்பாசிரியர் மதிப்பிற்குரிய பெ. சிதம்பரநாதன் அவர்களுக்கும் என்னுடைய உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ஆன்மிகப் பயணத்தில் காலம் பற்றி தெளிவை ஏற்படுத்தக் காரணமாக அமைந்த அருட்செலவர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்களை நான் 'அந்த இடைமருதில் ஆனந்தத் தேன் இருந்த பொந்து' என மாணிக்கவாசக சுவாமிகள் பாடிய திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியாகவே கருதுகிறேன்.

 

புதிய கண்டுபிடிப்பும் பழைய சொல்லும்

இயற்பியலார் கண்டுபிடித்த அணு (Atom) பற்றிப் பலரும் அறிவோம். 'ஆட்டம்'(Atom) எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ் மொழிபெயர்ப்புச் சொல்லாக 'அணு' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஆனால் தொன்றுதொட்டு தமிழர் வழக்கிலிருந்த 'அணு' எனும் சொல் குறிக்கும் பொருள் இயற்பியலார் கண்டறிந்த 'அணு' எனும் சொல் குறிக்கும் பொருளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு பாரம்பரியச் சொற்களைத் தற்காலக் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடப் பயன்படுத்துவதால் அச்சொல்லின் மரபுவழிப் பொருண்மை மறைக்கப்படுகிறது. எனவே புதிய கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுவதற்கு பழைய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதை விடப் புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்துவதே சிறப்பான வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதைக் கருத்தில்கொண்டு அறிவியலைத் தமிழாக்கம் செய்வோர் செயல்படவேண்டும்.

அறிவியலார் கண்டறிந்த 'அணு'

'அணு' என்று அழைக்கப்படும் சடப்பொருளின் அடிப்படை ஆக்கக் கூறு எவ்வாறு முதலில் கண்டறியப்பட்டது எனக் காண்போம்.

இரண்டு சமமான எடையுள்ள சோதனைக் குழாய்கள் எடுக்கப்படுகின்றன. இரண்டினுள்ளும் சமமான எடையுள்ள தீக்குச்சிகள் வைக்கப்படுகின்றன. காற்று வெளியேறாதவாறு இரண்டு சோதனைக் குழாய்களும் அடைக்கப்படுகின்றன. ஒரு சோதனைக் குழாயில் உள்ள தீக்குச்சி முற்றாக எரிந்து சாம்பலாகுமாறு சூடாக்கப்படுகிறது.

இரண்டு குழாய்களும் மீண்டும் எடை போடப்படுகின்றன. எடையில் எந்த மாற்றமும் இல்லை. இதிலிருந்து லவோசியர்(Lavoisier) எனும் விஞ்ஞானி கீழ்வரும் விதியை அனுமானிக்கிறார்.

லவோசியர்(Lavoisier)

ஒரு தாக்கத்தின் முன் உள்ள தாக்கிகளின் எடை, தாக்கத்தில் உருவான விளைவுகளின் எடைக்கு சமமாகும்'

இந்த விதி திணிவுக்காப்பு விதி (Law of conservation of mass) என இயற்பியலில் அழைக்கப்படுகிறது.

இதிலிருந்து டால்டன்(Dalton) எனும் இயற்பியல் விஞ்ஞானி கீழ்வருமாறு ஊகித்து அறிகிறார். தாக்கத்தின் முன்னும் தாக்கத்தின் பின்னும் எடை மாறாததால் தாக்கத்தின் முன் உள்ள பொருட்கள் யாவும் பின்னும் உள்ளன. ஆனால் வடிவம் குச்சி மற்றும் சாம்பல் என மாறுபட்டுள்ளது. எனவே நமது கண்ணிற்குப் புலப்படாத அடிப்படைக் கூறு தாக்கிகளிலும் விளைவுகளிலும் மாறாமல் இருக்க வேண்டும்; அதனால்தான் எடை மாறவில்லை என உய்த்தறிகிறார். அந்த அடிப்படைக் கூறே அணு (Atom) என வரையறுக்கிறார். இந்த வரையறையின் அடிப்படையில் டால்டன் ஓர் அணுக்கொள்கையை உருவாக்குகிறார்.

 

டால்டன்(Dalton)

டால்டனின் அணுக்கொள்கை

1. சடப்பொருள் யாவும் அணு எனும் பிரிக்க முடியாத அடிப்படைத் துகள்களால் ஆக்கப்பட்டுள்ளது.

2. ஒரு தனிமத்தில் உள்ள அணுக்கள் ஒரே தன்மை உடையனவாகவும் வெவ்வேறு தனிமங்களில் உள்ள அணுக்கள் வேறுபட்ட தன்மை உள்ளனவாகவும் இருக்கும்.

3. அணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.

இந்த அணுக்கொள்கையின் வழி அணுவின் வடிவம் எத்தகையது என்ற ஆய்வில் இறங்குகிறார் இரதபோர்ட் (Rutherford) என்ற விஞ்ஞானி. இவருக்கு முன் வாழ்ந்த தாம்சன்(Thomson) எனற விஞ்ஞானி அணு அணுத்துகள்களால் ஆனது என முன்மொழிகிறார். அணு எனபது நேர் ஏற்றமுள்ள ஒரு உருண்டை எனவும் அதில் எதிர் ஏற்றமுள்ள இலக்ட்ரோன்கள் ஆங்காங்கே சாத்துக்குடியில் விதைபோலப் பதிந்துள்ளது எனவும் கூறுகிறார்.

 

தாம்சன்(Thomson)

இரதபோர்ட் சோதனை

கதோட்டுக் குழாய் எனும் குழாயினுள் மெல்லிய பொன்னாலான இலை ஒன்றை அமைத்து அதன் மீது அல்பா கதிர்களை மோதவிடுகிறார்.

1. மையத்தில் உள்ள கதிர்கள் சென்ற வழியே திரும்பி வந்தன.

2. அதற்கு அருகில் உள்ள கதிர்கள் சிறிய விலகலுடன் சென்றன.

3. மையத்திலிருந்து அதிக தூரத்தில் சென்ற கதிர்கள் விலகலின்றி நேர்கோட்டில் சென்றன.

 

இரதபோர்ட்(Rutherford)

இதனால் இந்த அவதானங்களிலிருந்து இரதபோர்ட் கீழ்வரும் முடிவுகளுக்கு வருகிறார்.

1. அல்பா கதிர்கள் நேர் ஏற்றம் உள்ளதால் அவற்றை விலகச் செய்யும் மையப்பகுதியில் நேர் ஏற்றம் உள்ள துகள்கள் உள்ளன. (ஏனெனில் ஒத்த ஏற்றங்கள் ஒன்றை ஒன்று தள்ளும்)

2. மையத்து கதிர்கள் மோதி திரும்புவதால் அங்கு வலிமையான ஒரு பகுதி இருக்க வேண்டும். அதுவே அணுக்கரு (Nucleus) ஆகும்.

3. அணுக்கருவைச் சுற்றியுள்ள பகுதியில் எதிர் ஏற்றமுள்ள துகள்கள் கருவைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்த ஊகங்களின் அடிப்படையில் அணுவின் அமைப்பு பற்றிய கோட்பாட்டைக் கீழ்வருமாறு விளக்குகிறார்.

அணுவின் மையத்தில் அணுக்கரு உள்ளது. அணுக்கரு திண்மையான நியூட்ரான் (Nutron) எனும் நடு நிலையான ஏற்றமற்ற அணுத்துகள்களினாலும் நேர் (Positive) ஏற்றமுள்ள புரோட்டன் (Proton) எனும் அணுத்துகள்களாலும் ஆக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றி புரோட்டன்களின் ஏற்றத்திற்கு சமமான எதிர்மறை ஏற்றமுள்ள இலக்ட்ரோன் (Electron) எனும் துகள்கள் வலம் வருகின்றன. ஒவ்வொரு அணுவிலும் உள்ள புரோட்டன்களினதும், இலக்ட்ரோன்களினனும் எண்ணிக்கை சமமாகும்.

இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுவின் அமைப்பைக் கீழ்வருமாறு படமாகக் காட்டலாம்.

எ-டு: ஹீலியம் (He) அணு

அணுவெண் (Atomic Number) = 2

கோட்பாடும் பயன்பாடும்

மேலே கூறிய அணுக்கோட்பாட்டின் அடிப்படையில் அணுக்கள் இணைந்து மூலக்கூறுகள் (Molecules) உண்டாவதையும் (எ.டு; O + O = O2) வேதியல் தாக்கங்களையும் (Na + Cl = Nacl) விளக்க முடிந்தது.

இதுபோன்ற மாற்றங்களைத் திருத்தமாக விளக்குவதற்காக இலக்ட்ரோன்கன் பயணிக்கும் பாதையின் (Orbit) அமைப்பு கீழ்வருமாறு திருத்தி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு பாதையிலும் உட்பிரிவுகளும் அவைமுன் பின்னாக அமைவதும் கண்டறியப்பட்டது.

1,2,3,4........... என்பது இலக்ட்ரோன் பயணிக்கும் முதன்மைப் பாதைகள் (Main Orbits) ஆகும். s,p,d,f ஆகியன துணைப் பாதைகள் (Sub Orbits) ஆகும். ஒவ்வொரு முதன்மைப் பாதையிலும், துணைப்பாதையிலும் வழங்கக் கூடிய இலக்ட்ரோன்களின் அதிகபட்ச எண்ணிக்கை வருமாறு.

துணைப் பாதை

s - 2, p - 6, d - 10, f - 14

முதன்மைப் பாதை

பாதை 1 - 2, பாதை 2 - 8, பாதை 3 - 18 என அமையும். அதாவது 2(n2) என்ற சமன்பாட்டல் இந்த எண்ணிக்கையை அறியலாம். இங்கு n என்பது எத்தனையாவது முதன்மைப் பாதை என்பதைக் குறிக்கும்.

எ.டு : 8ஆவது முதன்மைப் பாதையில் வழங்கக் கூடிய அதிகபட்ச இலக்ட்ரோன்களின் எண்ணிக்கை வருமாறு.

2(82) = 2(64) = 128

தாக்கத்திலீடுபடும் இலக்ட்ரோன் ஒழுங்கு 1,2,3...... என அமையாமல் மேலே உள்ள படத்தில் அம்புக்குறியால் காட்டியவாறு 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p6, 5s2, 4d10, 5p6, 6s2, 4f14…… என அமையும்.

 

வானியல் கோட்பாடு

'அணு' எனும் உட்துகள் பற்றிய ஊகத்திலிருந்து இயற்பியல் மற்றும் வேதியல் விஞ்ஞான விளக்கம் வளர்ந்தது போலவே இரவு, பகல், அமாவாசை, பௌர்ணமி, ஆயணம் (உத்திராயணம், தெட்சணாயணம்) ஆகியவற்றிலிருந்து வானியல் கோட்பாட்டை நமது முன்னோர் வரையறை செய்தனர்.

வானில் உள்ள கிரகங்களைப் பொறுத்தவரை Observation என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அவதானத்தை நம் முன்னோர் எப்படிச் செய்தனர் என்பதே வியப்பான வினாவாக உள்ளது. ஆனால் அதைச் செய்துள்ளனர். அதிலிருந்து கிரகநிலை, பருவகாலம், அமாவாசை, பௌர்ணமி மற்றும் சூரிய, சந்திர கிரகணங்களை அறியும் வானியல் கோட்பாடுகளை உருவாக்கியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

 

கோட்பாடுகளின் வளர்ச்சி

அணுக்கொள்கை டால்டனில் ஆரம்பித்து தாம்சன், இரதபோர்ட், முதலானோர் ஊடாக தேவைக்கேற்ப திருத்தி அமைக்கப்பட்டது. ஆல்பர்ட் அயின்ஸ்டீன் (Albert Einstein) அணுவைப் பிளந்து சக்தியை எடுக்கலாம் என நிரூபித்த போது டால்டனின் அணுக் கொள்கை பொய்த்தே போயிற்று.

ஆல்பர்ட் அயின்ஸ்டீன் (Albert Einstein)

இது போல நமது பரம்பரிய வானியல் கணிதமும் சூரிய சித்தாந்தக் கோட்பாடு, வேதாந்த ஜோதிடக் கோட்பாடு முதலான பல கோட்பாடுகளாகப் பரிணாமவளர்ச்சி அடைந்து வந்துள்ளது.

அறிவியல் கோட்பாடுகளின் தோற்றம்

திணிவுக்காப்பு விதிச் சோதனையின் நோக்கலை (observation) விளக்குவதற்காக டால்டன் ஒரு அணுக் கோட்பாட்டை வடிவமைத்தார்.

பொன் இலையில் ஆல்பா கதிர்களை மோதவிடும் கதோட்டுக்குழாய் சோதனையில் அறியப்பட்ட கதிர்விலகும் நோக்கலை விளக்குவதற்காக இரதபோர்ட் அணுக் கோட்பாட்டை திருத்தி அமைத்தார்.

ஒரு பொருளின் மேல் தாக்கும் விசையை அதிகரித்தால் அப்பொருள் செல்லும் வேகமும் அதிகரிக்கும் என்பது நியூட்டனின் இயக்க விதி. ஆனால் 'ஒரு இலக்ட்ரோன் மேல் தாக்கும் விசையை பலமடங்கு அதிகரித்த போதும் அது செல்லும் வேகம் ஒளியின் வேகத்தை தாண்டி அதிகரிக்கவில்லை.' இந்த நோக்கலை விளக்குவதற்காக ஆல்பர்ட் அயின்ஸ்டைன் உருவாக்கியதே சார்பியல் கோட்பாடு (Thoery of Relativity)ஆகும்.

 

காலம்

சார்பியல் கோட்பாட்டினால் 'காலம்' என்பது புதிய கண்ணோட்டத்தை பெற்றது. அதுவரை கடிகார முள்ளின் ஓட்டத்தால் அளக்கப்படும் ஓர் அலகே காலம் என்று கருதப்பட்டது. ஆனால் அயின்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு காலம் என்பது சுருங்கவும் விரியவும் கூடியது (Time Contracts and Expands) என நிறுவியது. இதனால் காலம் என்பது கடிகாரத்தின் ஓட்டத்தால் அளந்தறியப்படும் ஓர் அலகு என்பதைத் தாண்டி சிந்தித்து அறிய வேண்டிய ஒன்று என்ற நிலை உண்டாயிற்று. அதற்கு உதவியாக காலம் பற்றி அறிவதற்கு உதவும் கருத்து ஒன்றைக் கீழே வைக்கிறேன்.

காலம் என்பது கடிகாரத்தாலோ, காலண்டரினாலோ, பஞ்சாங்கத்தாலோ, கிரக நிலைகளாலோ, பூமியின் சுழற்சியாலோ, பூமி வலம் வரும் கணக்கினாலோ அறியப்படும் ஒன்றல்ல. காலம் என்பது ஒரு கற்பனை. ஏதோ ஒரு பொருள் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். 'மாறாத ஒரு சீரான வேகத்தில் இடையறாமல் ஒரு திசை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கும், அந்தக் கற்பனை இயக்கமே காலம் ஆகும்'. அந்தக் கற்பனை இயக்கத்தின் வேகமே நொடி, நிமிடம், மணி எனக் கடிகார முள்ளின் இயக்க அலகால் அளவிடப்படுகிறது.

உலகில் எந்த இயக்கம் நிகழ்ந்தாலும், அதைக் காலம் எனும் கற்பனை இயக்கத்தோடு பொருத்தியே அளந்தறிகிறோம். அவ்வாறு அறியப்பட்ட கருத்துகளே மனதில் பதியப்பட்டுள்ளன.

இவ்வாறு காலம் எனும் கற்பனை இயக்கத்தின் வேகத்தோடு ஒளியின் வேகத்தை ஒப்பிட்டு அளக்கையில் ஒளியின் வேகம் 3x108 மீட்டர்/நொடி என்று அறியப்படுகிறது.

 

சார்புவேகம்

ஒரு வண்டி 30 கி.மீ/மணி என்ற வேகத்தில் செல்கிறது. இன்னொரு வண்டி அதே வேகத்தில் (30 கி.மீ/மணி) எதிர்த்திசையில் இந்த வண்டியைக் கடக்கிறது. ஓடும் வண்டியின் உள்ளே இருந்து பார்ப்பவரைப் பொறுத்தவரை கடந்து சென்ற வண்டி 60கி.மீ/மணி (30+30)வேகத்தில் செல்வதாகத் தோன்றும் என்பது சார்பு வேகக் (Relative Velocity)கோட்பாடு ஆகும்.

உண்மையில் இங்கு எந்த வண்டியும் 60கி.மீ/மணி வேகத்தில் செல்லவில்லை. இரண்டு வண்டிகளும் 30 கி.மீ/மணி வேகத்திலேயே சென்றன, காண்பவரைப் பொறுத்தவரை கற்பனையான ஒரு இயக்கம் 60கி.மீ/மணி வேகத்தில் நிகழ்ந்துள்ளது.

ஆனால் ஒளியின் வேகத்தில் (3x108 மீ/நொடி) இரண்டு வண்டிகள் மேலே கூறியவாறு எதிர்த்திசைகளில் பயணித்தால் அங்கு வெளிப்படும் சார்பு வேகம் (3x108)+(3x108) என இரட்டிக்காது. அந்த சார்பு வேகம் 3x108 மீ/நொடி எனும் தனி வேகமாகவே இருக்கிறது. அதாவது ஒளியின் வேகத்தில் சார்பு வேகக் கோட்பாடு மாறுபடுகிறது. இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன?

சார்பியல் கோட்பாடு

இதன் காரணத்தை விளக்குவதே ஆல்பர்ட் அயின்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடாகும். சார்பியல் கோட்பாட்டின் கணித நிறுவலைத் தவிர்த்துவிட்டு அதன் விளைவு பற்றிய அறிவினால் அதைப் புரிந்து கொள்ள முயல்வோமாக.

இரட்டையராகப் பிறந்த குழந்தைகளில் ஒன்று ஒளியின் வேகத்தில் செல்லும் விமானத்தில் வளர்கிறது. மற்றக் குழந்தை பூமியில் வளர்கிறது. நாற்பது வருடங்களின் பின் இருவரும் சந்திக்கின்றனர். புவியில் வளர்ந்த குழந்தைக்கு வயது 40 ஆகியிருக்கும். ஆனால் ஒளியின் வேகத்தில் பயணித்த குழந்தை பிறந்த நிலையிலேயே இருக்கும். இந்த இரட்டையர் பற்றிய சார்பியல் உண்மையை ஆங்கிலத்தில் Twin Paradox எனக் கூறுவர்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடியது யாதெனில் காலம் எனும் கற்பனை ஓட்டம் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது பூச்சியம் ஆகிவிடுகிறது என அறியலாம்.

 

அதாவது காலம் எனும் கற்பனை இயக்கத்தின் ஓட்டத்தை நாம் தெரிந்தோ தெரியாமலோ ஒளியின் வேகத்தை ஒத்த வேகமாகவே கொள்கிறோம் எனக் கருதவேண்டியுள்ளது. இதனால் ஒளியின் வேகத்தில் செல்லும்போது காலம் பூச்சியமாகிறது அதாவது இல்லாமல் போகிறது; ஒளியின் வேகத்தைத் தாண்டிச் செல்லும் போது காலம் சுருங்குகிறது. இவை யாவும் நோக்கும் மனிதனின் மனதில் தோன்றும் தொடர்பு வேகம் போன்ற கற்பனை இயக்கங்களே அல்லாமல் மெய்யாக நிகழ்வன அல்ல. அதாவது காலம் சுருங்குவதும், விரிவதும், இல்லாமல் போவதும் மனதில் நிகழ்வனவே அல்லாமல் புறத்தில் நிகழ்வன அல்ல என நாம் அறியலாம். இந்த நிலையைத் தாண்டி அடுத்த நிலைக்கு செல்ல முடியாமல் அறிவியலின் ராணி(Queen of Science) என்றழைக்கப்படும் இயற்பியல் நிற்பதும் குறிப்பிடத்தக்கது.

 

வானியல் கோட்பாடுகளின் தோற்றம்

ஒவ்வொரு நாளிலும் உள்ள இரவு, பகல் ஆகிய பொழுதுகளின் அளவை சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை கவனித்து அளவிடும் போது பெரும்பாலான நாட்களில் இரவுப் பொழுதும், பகல் பொழுதும் சம அளவாக இருக்கவில்லை. இரவுப் பொழுதும், பகல் பொழுதும் சம அளவாக இருக்கும் நாட்களை ஆயண நாட்கள்(Equinox Days)என அழைப்பர். இந்திய மரபில் இவ்விரண்டு சம பொழுது நாட்களையும் உத்திராயணம், தெட்சணாயணம் என அழைப்பர்.

ஓர் உத்திராயணத்திலிருந்து மறு உத்திராயணம் வரையுள்ள நாட்களின் எண்ணிக்கை ஒரு வருடம் என அறியப்பட்டது. இந்த ஒரு வருடம் என்பது 365 நாட்களுக்கு ஒரு முறை வருகிறதா என்றால் அவ்வாறு வரவில்லை. ஒரு உத்திராயணத்திலிருந்து மறு உத்திராயணம் வரையுள்ள நாட்களின் எண்ணிக்கை மாறிக்கொண்டே வந்தது. இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? என ஒரு சாரார் ஆய்ந்தனர். இந்த மாற்றத்தை எவ்வாறு காலண்டரில் குறிப்பிடுவது? என இன்னொரு சாரார் ஆய்ந்தனர்.

காலண்டரில் எவ்வாறு குறிப்பிடுவது என்ற ஆய்வில் மேலைத்தேச மரபில் மதகுருமாரும் மன்னர்களும் ஈடுபட்டனர். காரணம் என்ன என்ற அறிவியல் ஆய்வில் வானியலார்(Astronomers)ஈடுபட்டனர்.

பூமி சூரியனைச் சுற்றி வரும்போது ஒரே பாதையில் தொடர்ந்து சுற்றாமல் 360 டிகிரியையும் சுற்றி முடிப்பதற்கு முன் அடுத்த சுற்றுக்கான பாதை மாற்றத்தில் இறங்குவதால் இந்த விலகல் உண்டாகிறது என விளக்கினர். எது எவ்வாறிருப்பினும் அந்த விலகல் அளவை இன்றுவரை துல்லியமாகக் கணக்கிட முடியாமல் திணறிக் கொண்டே உள்ளனர் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

இந்த விலகலால் உண்டாகும் கணிதச் சிக்கலை இந்தியப் பாரம்பரிய முறையில் அமைந்த வானியல் கணித முறைப்படி தீர்த்து வைக்கும் ஆய்வில் பேராசிரியர் கே. சீனிவாசராகவன் பல வருடங்களாக ஈடுபட்டு வந்தார். இந்த ஆய்வை அகலப்படுத்தும் நோக்கில் அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் அவர்களின் முயற்சியால் 1979ல் சென்னை எத்திராஜ் கல்லூரியில் 'வரலாற்றுக்கு உதவும் வானியல்'(Astronomy as Aid to History) என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கைத் தொடர்ந்து வி. ஜி. இராமச்சந்திரன், ஜி. எஸ். சம்பத் ஐயங்கார், என். பி. இராமதுரை ஆகியோர் வாயிலாக அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் அவர்கள் இந்த ஆய்வினை முன்னெடுத்து வருகிறார்.

 

இந்திய அறிவியல் பாரம்பரியம்

விளைவுகளின் (Effects) அடிப்படையில் கோட்பாடுகளை உருவாக்குவது இந்திய அறிவியல் பாரம்பரியம் ஆகும். இது விளைவில் இருந்து அதை ஏற்படுத்தும் உருவைக் கண்டறியும் (From Effects to Existence ) மரபாகும்.

பூமியின் மேல் அதைச் சுற்றியுள்ள விண்ணுருக்கள் (Astronomical Bodies)ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்குவதற்காக பன்னிரு பாகங்களாகப் பகுக்கப்பட்ட ஒரு கட்டத்தினால் கிரக நிலைகளை விளக்கும் வானியல் கணித முறை ஒன்றினை நம் முன்னோர் உருவாக்கினர்.

மேலை தேச அறிவியல் மரபில்

1. பூமியும் பிற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.

2. தானே ஒளிரும் விண்ணுருக்கள் நட்சத்திரம்(Star)ஆகும். எனவே சூரியனும் ஒரு நட்சத்திரமே.

3. தானே ஒளிராது தனக்கென ஒரு பாதையில் சூரியனைச் சுற்றும் விண்ணுருக்கள் கோள்(Planet)ஆகும்.

4. தானே ஒளிராது சூரியனைச் சுற்றுவதோடு இன்னொரு கோளையும் சுற்றிவரும் விண்ணுருக்கள் துணைக்கோள் ஆகும். எனவே சந்திரன் ஒரு துணைக்கோள் ஆகும்.

இவ்வாறு உருக்களை வரையறை செய்து கொண்டு வானிலிருந்து உண்டாகும் மாற்றங்களைக் கணிக்க முயல்கின்றனர் அறிவியலார். இந்த அறிவியல் மரபு உருக்களில் இருந்து விளைவுகளை (From Existence to Effect)கணிக்கும் மரபாகும்.

 

ஆனால் இந்திய மரபுப்படி அறிவியலார் வரையறுக்கும் நட்சத்திரம், கோள், துணைக்கோள் ஆகிய யாவும் பூமியில் ஏற்படுத்தும் விளைவு என்ற நோக்கிலேயே வானியல் ஆய்வுக் கோட்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு கிரகங்களும் பூமியில் ஏற்படுத்தும் தாக்கத்தை அளந்தறியும் கட்டம் பூமியை மையத்திலும் மேலே கூறிய ஏழு கிரகங்களும் பூமியைச் சூழ இருப்பதாகவும் கருதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூழவுள்ள 360டிகிரி வட்டப்பாதை 12 பாகங்களாக அதாவது ஒவ்வொரு பாகமும் 30டிகிரி எனப் பகுக்கப்பட்டுள்ளது. இந்த 12 பாகங்களே 12 ராசிகள் எனப் பெயரிடப்பட்டுள்ளன.

 

இந்த 12 பாகங்களும் ஒவ்வொரு ராசியும் 9 பாதங்கள் என மேலும் 108 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த 108 பாகங்களும் நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள் என 27 நட்சத்திரங்களும் வரையறை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் பல நட்சத்திரங்களின் கூட்டமாகும். அந்தக் கூட்டத்தின் தோற்றத்தை ஒட்டியே அவை பெயரிடப்பட்டுள்ளன. அவையே அசுபதி (அஸ்வினி) முதலாக ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்கள் ஆகும்.

பூமியைச் சுற்றியுள்ள நட்சத்திரங்களையும் கோள்களையும் வானத்தில் கண்கொண்டும் தொலைநோக்கி முதலான அறிவியல் கருவிகள் கொண்டும் காணலாமேயன்றி அவற்றை இந்திய வானியல் மாதிரியுரு(Model)விளக்குவது போல் பூமியை மையமாக வைத்து இயங்குவதைக் காண முடியாது. விண்ணில் அவை சூரியனை மையமாக வைத்தே இயங்குகின்றன.

 

வானியலும் ஜோதிடமும்

இவ்வாறு விண்ணில் கண்டறியப்படும் ஒழுங்கிலிருந்து மாறுபட்டு அமைந்ததால் நமது இந்தியப் பாரம்பரிய முறையில் அமைந்த மாதிரியுருவை வானியல் கோட்பாடு என அறிவியலார் ஏற்றுக்கொள்வதில்லை. இதைப் போலி விஞ்ஞானம்(Pseudo Science)எனச் சிலர் வரையறுப்பர்.

ஆனால் கிரக நிலைகளை அளந்தறிவதில் நமது முறை நேர்த்தியாக அமைந்துள்ளதை யாராலும் மறுக்க முடியவில்லை. இதனால் இந்த வானியல் கோட்பாட்டை ஜோதிடவியல்(Astrology) கோட்பாடு என வகைப்படுத்திக் கூறுவர். அதன் பின்னரும் ஜோதிடவியலை அறிவியல் என ஏற்றுக்கொள்வதா கூடாதா என்ற வாதம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அதாவது 'உருக்களிலிருந்து விளைவு(From Existence to Effects)என்பது மேலைத்தேச அறிவியல் மரபாகவும், 'விளைவுகளிலிருந்து உருக்கள் (From Effects to Existence)' என்பது இந்திய பாரம்பரிய அறிவியல் மரபாகவும் இருப்பதாலேயே இந்த மறுப்பு நீடிக்கிறது. இன்று இந்தக் கடுமை ஒரளவு தளர்ந்து உலகெங்கும் உள்ள பல பல்கலைக்கழகங்கள் இந்திய பாரம்பரியத்தில் வந்த வானியல் கோட்பாட்டை ஜோதிடவியல் என்ற பெயரில் தனித்துறையாக கல்வியில் சேர்த்துக்கொண்டுள்ளன.

டால்டனின் அணுக்கொள்கை, தாம்சனின் அணுக்கொள்கை ஆகியன பொருத்தமற்றவை என இன்று புறந்தள்ளப்பட்டுவிட்டன. வெறும் கற்பனையாக அமைந்த இந்த விளக்கக் கோட்பாடுகளை அறிவியல் என ஏற்றுக் கொண்டு பின்னர் பொய் என மறுக்கும் அறிவியல் உலகம் ஏன் இந்தியப் பாரம்பரியத்தில் வந்த பஞ்சாங்க கணித முறைகளை மட்டும் முழுமையாக மறுதலிக்க வேண்டும் என்பது புதிராகவே உள்ளது. இந்திய மரபை தனியொரு அறிவியல் மரபாக மேலைத்தேச அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ள வகை செய்யுமாறு அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் தலைமையில் ஆய்ந்தறியப்பட்ட நமசிவாய வானியல் (நவா) வடிவமைக்கப்பட்டுள்ளது.

அறிவியலில் வழங்கும் காலம் என்பது சுருங்கவும் விரியவும் கூடியது எனக் கண்டோம். இதனால் அறிவியல் காலம் (Scientific time) என்பதை பரிமாணக் காலம் (Dimensional time) என வரையறுக்கலாம். இதுபோல் காலம் என்பது பல்வேறு துறைகளிலும் மாறுபட்ட பொருள் வரையறையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வது 'வானியலில் காலம்' என்பதைப் புரிந்து கொள்ள அவசியமாகிறது. பல்வேறு துறைகளிலும் வழங்கும் மாறுபட்ட காலங்களில் சில வருமாறு.

 

1.கடிகாரக் காலம் (Clock time)

தொடக்க காலத்தில், ஒரு சூரியோதயம் தொடங்கி அடுத்த சூரியோதயம் வரையுள்ள காலத்தை அளப்பதற்கே கடிகாரம் எனும் கருவி உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் பயன்பாட்டு நோக்கில் காலம் என்பது ஒரு நள்ளிரவு முதல் அடுத்த நள்ளிரவு வரை எனக் கருதப்பட்டது; பின்னர் ஒரு குறிப்பிட்ட நேரம் முதல் அடுத்துவரும் அக்குறிப்பிட்ட நேரம் வரையுள்ள 24 மணி நேர அளவு ஒரு நாள் எனக் கருதப்பட்டது. இன்று சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் வழங்கும் பகல், இரவோடு 24 மணிநேர அளவு மாறுபடுவதால் நள்ளிரவு 12 மணியை '00' மணி எனக்கொண்டு தொடரும் கடிகார நேரத்தை 23;59;59 (23 மணி 59 நிமிடம் 59 செக்கண்ட்) வரை தொடர்ச்சியாக குறிப்பிடுகிறோம்.

ஆதலால் கடிகாரக்காலம் என்பதை நாம் 'நடைமுறையில் செயல்பாடுகளை வரிசைப்படுத்திக் கொள்வதற்கு உதவியாகப் பயன்படும் ஒரு சீரான வேகத்தில் இயங்கும் ஒரு கருவியின் இயக்கம்' எனப் புரிந்து கொள்ளலாம்.

 

2.காலண்டர் காலம் (Calendar time)

ஒரு உத்திராயணத்திலிருந்து (Spring Equinox) அடுத்துவரும் உத்திராயணம் (Spring Equinox) வரையுள்ள நாட்களின் எண்ணிக்கை எனக் காலண்டர் காலக்கணிப்பு ஆரம்பமானது. இந்த நாட்களின் அளவு ஓர் ஆண்டு என வரையறுக்கப்பட்டது.

ஓர் ஆண்டில் வழங்கும் நாட்களின் எண்ணிக்கை மாறாமல் இருக்குமாறு காலண்டர் பயன்படுத்தப்படுகையில் ஆயணம் (Equinox) உருவாகும் நாள் அதே தேதியில் தொடரவில்லை என்பது அறியப்பட்டது. அதாவது வருடத்தில் 2 நாட்கள் இரவுப் பொழுதும் பகல் பொழுதும் சமஅளவில் வழங்கும் ஆயண நாட்களாக (Equinox days) அமைகிறது. இந்த ஆயண நாளில் ஒன்று மார்ச் 21 (Spring Equinox) அன்றும் மற்றது செப்டம்பர் 21 (Autumn Equinox) அன்றும் நிகழ்ந்தது. ஜூலியன் காலத்தில் மேலே கூறியவாறு உண்டான ஆயண நாட்கள் கிரிகோரியன் காலத்தில் முறையே மார்ச் 11 எனவும் செப்டம்பர் 11 எனவும் மாறுபட்டு அமைந்தன. இதனால் கிரிகோரியன் ஆயண நாட்கள் மார்ச் 21 ஆகவும், செப்டம்பர் 21 ஆகவும் அமையுமாறு காலண்டரில் வழங்கும் நாள் வரிசையை மாற்றி அமைத்தார். இதற்காக 15 நாட்களின் எண்ணிக்கையை காலண்டரிலிருந்து குறைத்தார்.

 

கிரிகோரியன்

இந்த மாற்றத்தினால் தொடர்ச்சியாக வரும் நாட்களின் எண்ணிக்கையை அளவிடுவதற்குப் பயன்படும் கருவியாக காலண்டர் இல்லாமல் போனது. அதாவது, காலண்டர் காலத்தால் ஒரு வரலாற்று நிகழ்வு குறிக்கப்பட்டாலும் அது இன்றிலிருந்து எத்தனை நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்தது என்பதை காலண்டரில் உள்ள நாட்களை எண்ணி சரியாகக் கணிக்க முடியாது. இதற்கு அவ்வப்போது காலண்டரில் செய்யப்பட்ட சீரமைப்புக் கணிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஆதலால் காலண்டர் காலம் என்பது பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுக்கும் நாட்களின் எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தது எனலாம். ஆயினும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் வருடக் கணக்கினால் 366, 365 என ஓர் ஆண்டில் வழங்கும் நாட்களின் எண்ணிக்கை மாறுபடுகிறது.

எனவே முடிந்த முடிவாகக் கூறுகையில் காலண்டர் காலம் என்பது நாம் 'நடைமுறையில் செயல்பாடுகளை வரிசைப்படுத்திக் கொள்வதற்கு உதவியாகப் பயன்படும் ஒரு நாள்ஒழுங்கு' என்றே கொள்ள வேண்டியுள்ளது.

இந்த நாள்ஒழுங்கு நாள், வாரம், மாதம், ஆண்டு எனும் அலகுகளால் காலத்தை அளவிடுகிறது. ஒரு நாளில் வழங்கும் உட்பொழுதை செக்கண்ட், நிமிடம், மணி என கடிகாரம் அளவிடுகிறது.

 

3.ஜோதிட காலம் (Astrological time)

ஜோதிடத்தில் காலம் என்பது ஒருவன் பிறந்த நேரம் அன்றைய சூரியோதய நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் அன்றைய கிரகநிலை மற்றும் லக்னம் ஆகியவற்றைக் கணித்து அவனுடைய வாழ்க்கை பற்றி எதிர்வுறுவதற்கு (Predict) ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்பவே தெசா, புத்தி முதலான காலங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இதனால் ஜோதிடவியல் காலம் என்பதை எதிர்வு கூறும் காலம் (Prediction time) எனத் தனியாக வரையறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த ஜோதிடவியல் காலம் கிரகநிலை என்னுமளவில் வானியல் காலத்துடனும் (Astronomical time) பிறந்த நேரம் என்னுமளவில் காலண்டர் காலம் (Calendar time) மற்றும் கடிகாரக் காலம் (Clock time) ஆகியவற்றுடனும்; tதெசா, புத்தி என்னுமளவில் தனக்கே உரிய தனிப்பட்ட காலக்கணிப்புடனும் (Prediction time) இணைந்த ஒன்றாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

 

4.பஞ்சாங்க காலம் (Pechanga time)

பஞ்சாங்கம் என்பது 1. நட்சத்திரம் 2.திதி 3.யோகம் 4.கரணம் 5.வாரம் ஆகிய 5 உறுப்புகளின் அடிப்படையில் காலத்தைக் கணிக்கிறது. இந்தக் கணிப்பு சமயச் சடங்குகளை (Religious rituals) முக்கியமாக இந்து மதச் சடங்குகளை (Hindu rituals) நிகழ்த்துவதற்கு உகந்த காலத்தைக் கணிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பஞ்சாங்கக் காலம் என்பதை சடங்குக் காலம் (Ritual time) என வரையறுக்கலாம்.

 

5.மொழிக் காலம் (Language time)

மொழியில் காலம் என்பது நிகழ்வுகளின் வரிசையையும், தன்மையையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

நிகழ்காலம் என்பதை ஆங்கிலச் சொல்லான Present என்பது குறிக்கும் பொருளில் கொள்ளக்கூடாது. 'நிகழ்' அதாவது ஒரு செயல் நிகழும் காலம் என்றே பொருள் கொள்ள வேண்டும். அந்த நிகழும் காலம் ஒருவன் ஒன்றைப் பற்றி எடுத்துப் பேசும் காலமாகவோ அதற்கு முந்திய காலமாகவோ இருக்கலாம். அந்த நிகழ் காலத்தின் எல்லையையும் பேசுபவன் விரும்பியவாறு வரையறை செய்து கொள்ளலாம். எவ்வாறெனில் 'நான் உண்பதற்கு முன் அவன் சென்றுவிட்டான்' என்பதில் 'உண்ணும் பொழுது' எனும் சில மணித்துளிகள் நிகழ்காலம். 'நான் வாழ்வதற்கு முன் அவன் வாழ்ந்தான்' என்பதில் 'வாழும் பொழுது' எனும் நீண்ட வயதுப் பொழுது நிகழ்காலம்.

தொடக்கம் - தொடர்ச்சி - முடிவு ஆகிய மூன்று தன்மைகளும் மொழியில் காலக் குறிகளால் வெளிப்படுத்தப்படுகின்றன.

அவன் விளையாடிக் கொண்டிருக்கிறான்' என்பதில் உள்ள 'கொண்டிரு' என்பது தொடர்ச்சியைக் குறிக்கிறது. 'அவன் விளையாடிக் கொண்டிடேயிருக்கிறான்' என்பதில் உள்ள 'கொண்டேயிரு' என்பது தொடர்ச்சியோடு அந்தச் செயல் தொடங்கிய காலம் பற்றிய உணர்வையும் குறிப்பால் உணர்த்துகிறது.

ஆதலால் மொழிக்காலம் என்பதை வெளிப்படுத்தப்படும் நிகழ்வின் வரிசை மற்றும் தன்மை (Expressive Order and Nature of the Event) என வரையறுக்கலாம்.

 

6.வரலாற்றுக் காலம் (Historical time)

வரலாறு என்பது தொடர்ச்சியான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தத் தொடர்ச்சி முன்னோக்கியும் பின்னோக்கியும் முடிவில்லாமல் செல்லக் கூடியது. இந்த வரிசையை வெளிப்படுத்த இயேசுநாதர் பிறந்த வருடத்திலிருந்து கி.மு (கிறிஸ்துக்கு முன்) மற்றும் கி.பி (கிறிஸ்துக்கு பின்) என முறையே முன், பின் வரிசைகளை வகுத்துள்ளனர். இதற்கெனத் தமிழ் மரபில் திருவள்ளுவரை மையமாக வைத்து ஒரு வரிசையை ஏற்படுத்தியுள்ளனர். உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுக் காலக்கணிப்பு வரிசையாக கி.மு - கி.பி முறையே வழங்கி வருகின்றன.

 

அருட்செல்வர். டாக்டர்.நா.மகாலிங்கம்

ஆதலால் வரலாற்றுக்காலம் என்பதை 'முன்வரிசை தொடங்குமிடம் பின்வரிசை' என அமையும் தொடர் வரிசை என வரையறுக்கலாம். பொதுவாக இந்த வரிசையை அளந்தறியும் கருவியாக காலண்டர் காணப்படுகிறது. ஆனால் இந்த வரலாற்றுக் கால வரிசையை அளந்தறியும் கருவியாக வானியல் காலத்தை (Astronomical time) பயன்படுத்துவது பற்றிய ஆய்வு பல வருடங்களாக அருட்செல்வர். டாக்டர்.நா.மகாலிங்கம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது; இந்த ஆய்வின் பயனாக 'வானியல் மூலம் வரலாறு காண்போம்' என்ற தலைப்பில் என்.பி.இராமதுரை அவர்கள் எழுதிய நூலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

 

7.வானியல் காலம் (Astronomical time)

வானியல் காலம் பற்றிய அறிவில்லாமல் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற வானியல் நிகழ்வுகள் பற்றியும் பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடியாது.

கெப்லர்

வானியல் காலம் என்பது சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள், துணைக்கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அறியப்படும் ஓர் இயக்க ஒழுங்கு (Functional Order) ஆகும்.

இந்த இயக்க ஒழுங்கை தொலைநோக்கி (Telescope), செயற்கைக்கோள் (Satellite) முதலான கருவிகள் வாயிலாக அறிந்து சூரியனை மையமாக வைத்துக் கணிப்பது மேலைத்தேச வானியல் மரபு (Western Astronomical Tradition) ஆகும்.

 

மாறாக இந்த இயக்க ஒழுங்கு பூமியில் ஏற்படுத்தும் தாக்கத்தை அறியும் பொருட்டு பூமியை மையமாக வைத்துக் கணிப்பது இந்திய ஜோதிடவியல் மரபு (Indian Astrological Tradition) ஆகும்.

 

கலிலியோ

தொடக்க காலத்தில் மேலைத்தேசங்களிலும் ஜோதிடவியல் மரபே காணப்பட்டது. கலிலியோ மற்றும் கெப்லர் ஆகியோரின் வருகைக்குப் பின்னரே சூரியனை மையமாகக் கருதும் வானியல் (Astronomy) ஆய்வு ஆரம்பமானது. ஆக, வானியல் என்பதே ஜோதிடவியலின் அடிப்படையிலிருந்து பிரிந்த ஓர் ஆய்வுத் துறையாக விளங்குகிறது என்றே கருத வேண்டியுள்ளது.

அதேசமயம் வானியல் காலம் என்பது ஜோதிடவியல் காலம் என்பதிலிருந்து மாறுபட்டது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

வானியல் காலம் என்பது பூமி முழுவதையும் தன்னுள் அடக்கியதால் பூமியைப் பொறுத்தவரை சார்பில்லாத் தனிநிலைக் காலமாக விளங்குகிறது. மற்றக் காலங்களை எல்லாம் கடந்த உயர்நிலைக் காலமாகவும் வானியல் காலம் அமைகிறது.

தனிநிலை, உயர்நிலை ஆகிய இரண்டு தன்மைகளாலும் வானியல் காலத்தை அடிப்படையாக் கொண்டு செய்யும் கணிப்புகள் நேர்த்தியில் சிறந்தவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எனவே வானியல் காலம் என்பதை நாம் கணித்தறியக் கூடிய உயர்நிலை மற்றும் தனிநிலை காலம் (The Highest and Independent level time) என வரையறுக்கலாம். உயர்நிலை என்பது தனிநிலையாகவும் இருக்கிறது என்ற நிலையில் அறிவு தொடர்பான பல அடிப்படைச் சிக்கல்களுக்கு தெளிவான விடை பெறவும் இந்த வானியல் காலம் பற்றிய உணர்வு கண்டிப்பாக வழிகாட்டும்.

சைவசித்தாந்தம் போன்ற தத்துவத்துறைகளிலும் மேலாண்மை (Management) போன்ற பிற துறைகளிலும் காலம் என்பது தனித்தனிப் பொருள்களில் வரையறுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே எந்தவொரு துறை அறிவையும் முழுமையாகப் பெறுவதற்கு அத்துறையில் காலம் என்பது என்ன பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

காலம் எனும் கூறு எல்லாத் துறைகளிலும் நேரடியாகக் குறிப்பிடப்படாவிட்டாலும் காலம் எனும் கூறு இல்லாத துறை இல்லை என்றே கூறலாம். எனவே எந்தத் துறை அறிவையும் எளிதாகவும் தெளிவாகவும் பெற்றுக்கொள்ள அவ்வத் துறைகளில் வழங்கும் காலம் என்பதன் பொருளைத் துல்லியமாகப் புரிந்துகொள்வது பெருந்துணையாக அமையும்.

நவா

வானியல் காலம் என்பதை ஒரு குறிப்பிட்ட கிரகநிலையிலிருந்து மறுபடி அதே கிரகநிலை தோன்றும் வரையுள்ள காலம் என 'நமசிவாய வானியல் (நவா)' வரையறை செய்துள்ளது. இந்தக் கால அளவு 12,160 ஆண்டுகள் என அருட்செல்வர் ஐயா தலைமையில் நிகழ்த்திய ஆய்வின் பயனாக என்.பி.இராமதுரை அவர்கள் கண்டறிந்துள்ளார். இந்த 12,160 ஆண்டுகள் என்பது ஒரு மகாயுகம் என இந்திய வேத மரபினை ஒட்டி வரையறை செய்யப்பட்டுள்ளது.

 

முழுச்சுற்றும் முழுமுதல் சுற்றும்

ஒத்த கிரகநிலை என்பது 12,160 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். இந்தக் கால அளவை முழுமுதல் சுற்றுக்காலம் என அழைக்கலாம். அதாவது ஒரு முறை 360 டிகிரி சுற்றிவர எடுக்கும் காலத்தை முழுச்சுற்றுக் காலம் எனவும் ஒத்த நிலை மீண்டும் உண்டாகும் வரையுள்ள சுற்றுக்காலத்தை முழுமுதல் சுற்றுக்காலம் எனவும் வரையறுக்கலாம்.

முழுமுதல் சுற்று எனும் நிலை வானில் உண்டாகும் கோள்களின் சுற்று தொடர்பானது. ஆனால் முழுமுதல் சுற்றுக்கு ஆகும் காலத்தை அளவிடும் கடிகார நேரம், காலண்டர் நேரம் ஆகியவை பூமி, சந்திரன், சூரியன், ஆகிய மூன்றின் சுற்று தொடர்பாகவே வரையறுக்கப்படுகிறது.

ஒரு சூரியோதயம் முதல் அடுத்த சூரியோதயம் வரையுள்ள காலம் ஒரு நாள் ஆகும். ஒரு நாள் என்பது 24 மணி நேரம் எனவும்; 1 மணி என்பது 60 நிமிடம் எனவும்; 1 நிமிடம் என்பது 60 நொடி எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளது. பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு எடுக்கும் காலம் (60x60x24) 8640 நொடிகள் ஆகும்.

 

கால அளவுத்திட்டம்

இவ்வாறு கடிகாரக் காலமும், காலண்டர் காலமும் நொடி, நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், ஆண்டு ஆகிய அலகுகளால் தொடர்புற அளவிடப்படுகின்றன. அந்த அளவீட்டு முறை வருமாறு

   

          60 நொடி                = 1 நிமிடம்

          60 நிமிடம்            = 1 மணி

          24 மணி                 = 1 நாள்

          7 நாள்                    = 1 வாரம்

          4 வாரம்                 = 1 மாதம்

          12 மாதம்               = 1 வருடம்

வாரம் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி எனத் தொடர்ந்து வரும். ஒரு மாதத்தில் 4 வாரங்கள் இருப்பினும் (7x4) ஒவ்வொரு மாதமும் 28 நாட்கள் கொண்டதாக வரையறை செய்யப்படுவதில்லை. மாதம் என்பது ஒரு பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரையுள்ள நாட்களின் எண்ணிக்கை என்றே அளவிடப்படுகிறது. ஆயினும் ஒவ்வொரு மாதத்திலும் வழங்கும் நாட்களின் எண்ணிக்கை 29 முதல் 32 வரை மாறுபட்டு அமைகிறது.

இதேபோல் ஆண்டு என்பதும், 12 சம அளவு நாட்களை உடைய மாதங்களின் பெருக்கமாக இல்லாமல் ஒரு உத்திராயணத்திலிருந்து மறு உத்திராயணம் வரையுள்ள நாட்களின் எண்ணிக்கை அளவு என்றே கணக்கிடப்படுகிறது.

 

கால அளவுத்திட்டத்தின் அடிப்படை

நொடி, நிமிடம், மணி என்பது கடிகாரச் சுற்றின் அடிப்படையிலும்; நாள் என்பது பூமி தன்னைத் தானே சுற்றும் புவிச்சுற்று அடிப்படையிலும்; மாதம் என்பது சந்திரன் பூமியைச் சுற்றும் சந்திர பூமிச் சுற்றின் அடிப்படையிலும்; ஆண்டு என்பது பூமி சூரியனைச் சுற்றும் சூரிய பூமிச் சுற்றின் அடிப்படையிலும் கணக்கிடப்படுகிறது. வாரம் மட்டும் 7 நாட்களுக்கொரு முறை வழங்கும் தனிச் சுற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதில் கவனத்திற்கொள்ள வேண்டியது யாதெனில், கடிகாரச் சுற்றும், வாரச்சுற்றும் கணிப்பு முறையில் கிரகங்களின் சுழற்சியோடு தொடர்புபடாத தனிச்சுற்றுகள் என்பதே ஆகும்.

மேலே கூறிய கால அளவுகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைவது நாள் எனும் அலகே ஆகும். நாள் என்பது பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றி வர எடுக்கும் கால அளவாகும். இக்கால அளவே நுண்ணலகாக (Micro unit) பின்னோக்கி கடிகாரக் காலமென்ற அளவீட்டிலும், பேரலகாக (Macro unit) முன்னோக்கி வாரம், மாதம், வருடம் என்ற அளவீடுகளிலும் அளவிடப்படுகிறது. இதிலிருந்து நாள் எனும் புவிச் சுழற்சியே கால அளவீட்டின் அடிப்படையாக அமைவதை அறியலாம்.

 

காலம் எனும் அச்சு

காலம் என்பது ஒரு கருத்துமை (Abstract) பொருள் எனவும், அது பல்வேறு துறைகளிலும் பல்வேறு வகையாக வரையறுக்கப்படுகிறது எனவும், சென்ற இதழில் விளக்கப்பட்டுள்ளது. இதை இன்னும் தெளிவாகக் கீழ்வருமாறு புரிந்து கொள்ளலாம்.

 

காலம் என்பது தொடர்ச்சியைப் பேணும் முதுகெலும்பாகவும் விளங்குகிறது.

நமது வாழ்வை எடுத்துக்கொண்டால் நாம் கருவான அல்லது பிறந்த நாள் முதல் ஒவ்வொரு நொடியும் நிகழ்ந்தவற்றை காலத்தோடு தொடர்புபடுத்தி வரிசையாகப் பதிவு செய்துள்ளோம். இந்தக் காலவரிசைப்படி அமைந்த நிகழ்வுப் பதிவுகளின் தொகுப்பே மனம் ஆகும். இந்த மனப் பதிவுகள், புலன் வழி வந்தவையாகவும், புதிய சிந்தனைகளாகவும் ஏற்படுகின்றன.

இதேபோல் நமது உடலை எடுத்துக்கொண்டால் தொடர்ச்சியாக நிகழும் இயக்கமான மூச்சை அதன் காலம் எனலாம். மூச்சுகளின் எண்ணிக்கையாகவே உடலின் ஆயுளை சித்தர்கள் கணித்தறிந்தார்கள் என்பது பலரும் அறிந்ததே.

எந்தவொரு இயக்கத்தையும் முதுகெலும்பாக எடுத்துக்கொண்டு பிற செயல்பாடுகளை எல்லாம் அந்த ஒன்றோடு தொடர்புபடுத்திக் கருதுவோமானால் அந்தப் பொது இயக்கமே குறிப்பிட செயல்பாட்டுத் தொகுதியின் காலம் அல்லது அச்சு எனக் கருதலாம்.

பொருளாதாரத்தை எடுத்துக்கொண்டால் அங்கு நிகழும் எல்லாச் செயல்பாடுகளையும் நாம் பணம் என்பதோடு தொடர்புபடுத்தி இலாபமா, நட்டமா என்றே பார்க்கிறோம். இதனால் பணம் பொருளாதாரத்தில் காலமாக அமைகிறது. இந்தக் காலத்தை அளவிடும் கடிகாரத்தைப் பொறுத்தவரை இங்கிலாந்து கடிகாரம் ஸ்டர்லிங் பவுண்ட் இந்தியக் கடிகாரம் ரூபாயை விட வேகமாக இயங்குகிறது. இதனால், இங்கிலாந்து பணத்தின் மதிப்பு இந்தியப் பணத்தின் மதிப்பை விட அதிகமாக உள்ளது. இந்தப் பண மதிப்பு உலக நாடுகளின் பொருளாதாரக் கடிகாரக் காலங்களை ஒன்றிணைப்பதன் மூலமே சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தப் பொருளாதாரக் காலங்களின் இணைப்புக்கும், மதிப்புக்கும் காரணமான அடிப்படைகளை ஆய்ந்தால் இன்றைய பொருளாதாரப் போக்கு பற்றிய பல புதிய கண்டுபிடிப்புகளை நாம் செய்ய முடியும்.

இந்தப் பொருளாதார முள்ளந்தண்டுடன் சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரம் பொருந்தாமல் தனித்து இருந்தமையால் அண்மையில் உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கம் இந்தியப் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கவில்லை. இதனால் வளர்ந்த நாடுகள் இந்திய பொருளாதாரக் காலத்தைத் தமது பொதுக்கால முதுகெலும்புடன் இணைத்துக்கொள்ள இன்று தீவிர முயற்சி செய்கின்றன. உலகமயமாக்கலின் நோக்கமும் இதுவே ஆகும். பொதுக்கால இணைப்பு என்பது நாடுகளின் பொருளாதார ஏற்றத்தாழ்வை தாமே தீர்மானிக்க பன்னாட்டு நிறுவன முதலாளிகளுக்கு வழி வகுக்கிறது.

 

புவிச்சுற்றே காலத்தின் அச்சு

புவிச்சுற்றின் அடிப்படையிலமைந்த நாள் என்பது கால அளவின் முதுகெலும்பாக அமைவதால் புவியின் இயக்கத்தை மையமாகக் கொண்டே வானியலில் காலம் அளந்தறியப்படுகிறது என அறியலாம்.

இதனால் பூமியை மையமாக வைத்தே பிற கிரகங்களின் (சூரியன் உட்பட) இயக்கங்களும் அளந்தறியப்படுகிறது எனக் கருதுவதில் தவறில்லை. அது எவ்வாறெனில் புவிச்சுழற்சி எனும் ஒன்று தடைப்படுமானால் நாம் கணக்கிடும் காலக்கணக்கு முழுவதும் தடைப்படும். இன்னும் தெளிவாகக் கூறினால் புவிச் சுழற்சியில் ஏற்படும் மாற்றம் வானியல் காலக்கணிப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது புவிச்சுழற்சி வேகத்தில் ஏற்படும் மாற்றத்தால் நாள் அளவு மாறுவதால் பிற காலக் கணிப்புகளும் மாறும். அதே சமயம் இந்த மாற்றம் எல்லாக் கணிப்புகளிலும் ஒரே மாதிரி அமைவதால் கண்டறிய முடியாத ஒன்றாகிப்போகிறது. கடிகார வேகத்திலும் இந்த மாற்றம் புவியீர்ப்பு மாற்றத்தின் வழி ஒரு சீரான மாற்றத்தை ஏற்படுத்துகிறது எனக் கருதவும் இடமுண்டு. இதனால் காரணம் அறியப்படாத பல புவியியல் மாற்றங்களுக்கு நம்மால் அறிய முடியாத மேலே கூறிய புவிச் சுழற்சி மாற்றம் காரணமாகலாம் என ஊகிக்க இடமுண்டு எல்லா அளவுகளுக்கும் இதுவே (நாள்) அடிப்படையாவதால் இந்தச் சுழற்சி மாற்றத்தைப் பிற கிரகச் சுழற்சியோடு ஒப்பிட்டும் அளந்தறிய முடியாது.

கணிப்பொறியில் வழங்கும் எல்லாப் பதிவுகளும் அதனுள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் கடிகாரக் காலத்தை முதுகெலும்பாகக் கொண்டே நினைவில் (Memory) வைக்கப்படுகின்றன. நாள், மாதம், ஆண்டு என்ற கால வரிசையில் ஆண்டு என்பதை இறுதி இரண்டு எண்களால் குறிப்பிட்டு கணியத்தில் கணக்குகளை முன்னெடுத்தனர். இதனால் இறுதி எண்கள் 00 என வரும்போது கணியம் அதை 1900 எனக் கருதுமா. 2000 எனக் கருதுமா என்ற சிக்கல் உண்டானது. இதையே Y2K சிக்கல் எனப் பெயரிட்டு சரி செய்த வரலாறு உலகறிந்த ஒன்றாகும்.

இதுபோல் இந்தப் பிரபஞ்சம் பிறந்த நாள் முதல் எவ்வாறு உள்ளது என்பதைத் தொடர்புபடுத்திப் பார்க்கும் முதுகெலும்பாக இந்துக்கள் பிரணவத்தை கருதுகின்றனர். பிரணவம் என்பது பிரபஞ்சம் தோன்றிய கால முதல் வழங்கும் ஓர் ஒலித் தொடராகும். இந்த ஒலித்தொடரையே ஓம் என்ற ஓசையாகக் கருதுகின்றனர். நாதத்தின் எல்லையான நாதாந்தம் எனும் பிரணவத்தைக் கடந்து இருக்கும் கடவுள் எனச் சிவபெருமான் கருதப்படுகிறார்.